ஹோமாகம பொலிஸ் காவலில் இருந்தபோது இஷார ஹர்ஷ என்ற நபர் உயிரிழந்த சம்பவம் தாக்குதல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும், எனினும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையிலேயே அதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (29) வியாழக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ அறிக்கையில் உயிரிழந்த நபரின் மூன்று விலா எலும்புகள் உடைந்துள்ளதாகவும், மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், மரணத்திற்கான காரணம் தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குற்றப்பிரிவில் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவருக்கு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.










