கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக குக் தீவில் சிக்கியுள்ள இலங்கைப் பெண் ஒருவரின் நிலைமை தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடிவரவு ஆலோசனைகள் மற்றும் தொடர்ச்சியாக விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை காரணமாக அவரால் இலங்கைக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஊடாகப் பயணிப்பதற்கான இடைத்தங்கல் விசாக்களைப் பெற அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாக, முன்னதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், புதிய செய்தி அறிக்கையில் குறித்த பெண் ருச்சிரா ரணசிங்க (வயது 50) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நிதி நெருக்கடி காரணமாகத் தனது சிறிய ரீ-சேர்ட் தொழிற்சாலையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதையடுத்து, அவர் 2018ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்.
ஆரம்பத்தில் ஹொங்கொங்கிற்குச் சென்று பராமரிப்புப் பணியாளராகப் பணியாற்றிய அவர், பின்னர் 2022 டிசம்பரில் நியூசிலாந்திற்குச் சென்று அங்கு புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளார்.
இதனையடுத்து, வெளிநாட்டிலிருந்து வேலைவாய்ப்பு விசாவுக்கு விண்ணப்பிப்பதற்காகத் தற்காலிகமாக நியூசிலாந்தை விட்டு வெளியேறுமாறு குடிவரவு ஆலோசனை நிறுவனம் ஒன்று அவருக்கு ஆலோசனை வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அவர் குக் தீவிற்குச் சென்ற போதிலும், அங்கு சமர்ப்பித்த வேலைவாய்ப்பு விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நியூசிலாந்தை விட்டு வெளியேறியதன் மூலம் புகலிடக் கோரிக்கையுடன் தொடர்புடைய அவரது விசாவின் நிபந்தனைகளையும் அவர் மீறியுள்ளார்.
இதன் காரணமாக, நியூசிலாந்திற்கான இடைத்தங்கல் விசாவைப் பெற அவர் மூன்று முறை விண்ணப்பித்த போதிலும் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, அவுஸ்திரேலியாவிற்கான இடைத்தங்கல் விசாவைப் பெற நான்கு முறை மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.
மேலும், ஹவாய் அல்லது டஹிட்டி ஊடாக இலங்கை திரும்புவதற்கான அவரது முயற்சிகளும் விசா விண்ணப்பங்களுக்குத் தேவையான உயிரியல் அடையாளப் பதிவு (Biometric) நடைமுறைகள் காரணமாக வெற்றியளிக்கவில்லை.
இந்நிலையில், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தனது ஒரே மகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக எப்படியாவது நாடு திரும்ப வேண்டும் என அவர் தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“அவர்கள் என்னிடம் கேட்கும் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். நான் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், குக் தீவில் உள்ள ஹோட்டல் ஒன்று அவரிடம் தங்குமிடக் கட்டணம் அறவிடாமல் இலவசமாகத் தங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளதுடன், அப்பகுதி மக்களும் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அவரது இடைத்தங்கல் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட நியூசிலாந்து குடிவரவுத் திணைக்களம், அவர் உண்மையாகவே நியூசிலாந்து ஊடாக மற்றொரு நாட்டிற்குப் பயணிக்க விரும்புகிறார் என்பதில் அதிகாரிகளுக்கு நம்பிக்கை ஏற்படாத காரணத்தினாலேயே விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முக்கிய முன்னேற்றமாக, குறித்த பெண்ணை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வெலிங்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அவரது நாடு திரும்புவதற்கான தீர்வொன்றைக் கண்டறியும் நோக்கில் நியூசிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நீண்டகாலமாக அவர் எதிர்கொண்டுவரும் இந்த நெருக்கடி மற்றும் அது அவரது நலனில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து குடும்பத்தினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ள முழுமையான செய்தி அறிக்கை:
I’ve been stuck on a tiny Pacific island for years and can’t get a transit visa to fly home










