சுமார் 49.4 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் 64 வயதுடைய தென்கொரியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வரும் குறித்த நபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை தாமதமாக வந்த தனது பயணப் பொதியைப் பெற்றுக்கொள்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, சந்தேகநபர் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்திலிருந்து டுபாய் ஊடாகப் பயணித்து, கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
எனினும், போதைப்பொருள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் அவரது பயணப் பொதியானது அவர் பயணித்த விமானத்தில் வந்தடையவில்லை. பின்னர் மற்றுமொரு விமானம் மூலம் குறித்த பயணப் பொதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர், குறித்த பயணப் பொதியைப் பெற்றுக்கொள்வதற்காக சந்தேகநபர் மீண்டும் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரைக் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










