சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த நிலையில், தனது தொழில் வழங்குநரிடமிருந்து அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இலங்கைப் பணிப்பெண் பிரமதி மதுமாலி நிசன்சலா தற்போது பாதுகாப்பாக இருப்பதுடன், சிகிச்சையும் பெற்று வருவதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணுடன் தாம் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் உரையாடியதாகவும், அவர் தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தில் இருப்பதாகவும் பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
“நான் இப்போது அவருடன் பேசினேன். அவர் தற்போது முகவர் நிறுவனத்தில் இருக்கிறார். நலமாக உள்ளார். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூதரகத்தின் தொழிலாளர் பிரிவு அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. இந்த விவகாரத்தை நான் கையாள்கிறேன். தேவையான அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்து, அவரை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் பாதுகாப்பு தொடர்பில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சார்பில் சமூக ஆர்வலர் ஒருவர் அவசர உதவி கோரியிருந்த நிலையில், பிரதி அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் குறித்த பெண் தெரிவித்த பின்னர், மூன்று நாட்களாக அவருடன் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சமூக ஆர்வலர் தனது கோரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
தொழில் வழங்குநரிடமிருந்து அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், தன்னை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு உதவுமாறும் அவர் கோரியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சுமார் நான்கு மாதங்களாக அங்கு பணியாற்றி வந்த போதிலும், சவூதி அரேபியாவில் பணியாற்றுவதற்கும் வசிப்பதற்கும் அவசியமான ‘இகாமா’ (Iqama) எனப்படும் வதிவிட அனுமதிப்பத்திரத்தை தொழில் வழங்குநர் பெற்றுக்கொடுக்கத் தவறியுள்ளதாகவும் சமூக ஆர்வலர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இலங்கைத் தூதரகத்தின் தொழிலாளர் பிரிவு இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளை நிறைவு செய்து குறித்த பெண்ணை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.










