பயங்கரவாதக் குழுக்களில் இணைவதற்காகவோ அல்லது பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவோ தனிநபர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தடுக்கும் நோக்கிலான புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையை இலங்கை முன்னெடுத்துள்ளது.
வெளிநாட்டு பயங்கரவாதப் போராளிகளைத் தடுப்பதற்கான சட்டமூலத்துக்கு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், விரிவான கலந்துரையாடலின் பின்னர் இந்தச் சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2014 செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 2178ஆம் இலக்கத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதே இந்தச் சட்டமூலத்தின் பிரதான நோக்கம் என நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பயங்கரவாதப் போராளிகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைத் தடுப்பதையும் ஒடுக்குவதையும் குறித்த தீர்மானம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுதல், அவற்றைத் திட்டமிடுதல், தயார்படுத்துதல் அல்லது பங்கேற்றல், அத்துடன் பயங்கரவாதப் பயிற்சிகளை வழங்குதல் மற்றும் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் இந்தச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
மேலும், முன்மொழியப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இலங்கைப் பிரஜைகள் அல்லது வெளிநாட்டுப் பிரஜைகள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் சில பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக இலங்கையில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இந்தச் சட்டமூலம் வழிவகுக்கும்.
குழுக் கலந்துரையாடலின்போது, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை இன அடிப்படையில் இலக்குவைப்பது இந்தச் சட்டத்தின் நோக்கமல்ல என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், நாடாளுமன்றக் குழு சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கியபோதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அதற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஊடாக நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
எவ்வாறாயினும், சட்டமாக்கப்படுவதற்கு முன்னர் இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தின் எஞ்சிய சட்டமன்ற நடைமுறைகளையும் நிறைவு செய்ய வேண்டும்.










