கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை இடைநிறுத்தும் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிப்பதா என்பது தொடர்பான உத்தரவை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வழங்கவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார ரணசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த நவம்பர் 3ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவானால் நாமல் ராஜபக்ஷவுக்குப் பிணை வழங்கப்பட்ட தீர்மானத்தைச் சட்டரீதியாகத் தவறானது எனக் குறிப்பிட்டு, அதற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149(1)ஆம் பிரிவின் பிரகாரம், அச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணை நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என்றும், விதிவிலக்கான சூழ்நிலைகள் காணப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே இதற்கு மாறான தீர்மானத்தை எடுக்க முடியும் என்றும் வாதிட்டனர்.
எனவே, பிரதான நீதவான் வழங்கிய பிணை உத்தரவு சட்ட ஏற்பாடுகளை மீறியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்படுவதன் மூலம் வழக்கின் சாட்சிகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்றும், அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றும் அரச தரப்பு கவலை வெளியிட்டது.
எனினும், இந்தக் கோரிக்கைக்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்த நாமல் ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அரச தரப்பு கோரும் இடைக்கால நிவாரணமும் இறுதியாகக் கோரப்படும் நிவாரணமும் ஒன்றாக இருப்பதாக வாதிட்டார்.
இவ்வாறான கோரிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்புகளின் அடிப்படையில் அனுமதி வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதவான் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு, விதிவிலக்கான சூழ்நிலைகளை முறையாகக் கருத்திற்கொண்டே நாமல் ராஜபக்ஷவுக்குப் பிணை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, சந்தேகநபரின் தாயார் கடுமையான இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை விசேட சூழ்நிலையாகக் கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும், எனவே பிணை உத்தரவை இடைநிறுத்தக் கோரும் இடைக்காலத் தடையுத்தரவை நிராகரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்திடம் கோரினார்.
இருதரப்பு சட்டத்தரணிகளினதும் சமர்ப்பணங்களைக் கேட்டறிந்த நீதிபதி லால் பண்டார ரணசிங்க, பிணை உத்தரவை இடைநிறுத்தும் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிப்பதா என்பது தொடர்பான தீர்மானம் நவம்பர் 18ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.










