போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பொரளைஸ்கமுவையில் சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு மற்றும் காணி ஆகியவற்றை மத்திய குற்ற விசாரணைப் பணியகம் முடக்கியுள்ளது.
குறித்த சொத்து, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து (UAE) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சந்தேகிக்கப்படும் நபருடன் தொடர்புடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின்போது, குறித்த சொத்து ஆரம்பத்தில் சந்தேகநபரின் தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டு, பின்னர் அன்பளிப்புப் பத்திரம் மூலம் அவரது மகளின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, நேற்று வெள்ளிக்கிழமை சொத்தை முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த 14 நாட்களுக்கு குறித்த சொத்தை விற்பனை செய்தல், உரிமையை மாற்றுதல் அல்லது வேறு எந்தவொரு கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபடுதல் தடை செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தற்போது மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (படம் AI)










