கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட SUV ரக வாகனமொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இது தொடர்பில் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நாரஹேன்பிட்டி ஜனதா பொல சந்திக்கு அருகில் சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, குறித்த SUV ரக வாகனத்தைக் கைப்பற்றிய பொலிஸார், அதனை வைத்திருந்ததாகக் கூறப்படும் பொரளைஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.










