மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் எண்ணமோ ஆர்வமோ கொண்டிருக்கவில்லை என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகி சுமார் இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசியலிலிருந்து வணிகத்துறைக்கு மாறிய தனது வாழ்க்கைப் பயணம் தொடர்பில் அவர் சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 14ஆம் திகதியைக் குறிக்கும் வகையில் வெளியிட்டுள்ள பதிவில், தனது மறைந்த தந்தையின் 84ஆவது பிறந்தநாள் மற்றும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்டு தோல்வியடைந்த இரண்டாவது ஆண்டு நிறைவு ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
தேர்தல் நிறைவடைந்து ஒரு மாதத்தின் பின்னர் அரசியலிலிருந்தும் அரசியல் செயற்பாடுகளிலிருந்தும் முழுமையாக விலகுவதற்குத் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அரசியலிலிருந்து வணிகத்துறைக்கு மாறுவதற்கான எனது பயணத்தை ஆரம்பித்து தற்போது 23 மாதங்கள் கடந்துள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் பகுதி நேரப் பணியாகத் தொடங்கிய இந்த மாற்றம், படிப்படியாக முழுநேரப் பணியாக மாறியுள்ளதாகவும், தற்போது அந்தப் பணியில் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசியலிலிருந்து விலகியதன் மூலம் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிடவும், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தவும், பயணங்களை மேற்கொள்ளவும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சுய முன்னேற்றத்திற்கும் கூடுதல் நேரத்தை ஒதுக்கவும் முடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு தொழில்துறைகளை அறிந்துகொள்ளவும், புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளவும், வாழ்க்கையைப் பரந்த கண்ணோட்டத்தில் அணுகவும் இந்த மாற்றம் வாய்ப்பளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது அரசியல் வாழ்க்கையில் கிடைத்த வாய்ப்புகள், தன்னுடன் பணியாற்றியவர்களின் நம்பிக்கை, வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றுக்கு நன்றியைத் தெரிவித்துள்ள அவர், பொதுவாழ்வில் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து பெருமையடைவதாகவும் கூறியுள்ளார்.
“நான் அரசியலிலிருந்து விலகி எனது வாழ்க்கைப் பாதையில் முன்னேறிச் சென்றுவிட்டேன். மீண்டும் அரசியல் வாழ்க்கைக்கோ அரசியல் செயற்பாடுகளுக்கோ திரும்பும் எண்ணமோ ஆர்வமோ எனக்கில்லை.
நான் தெரிவுசெய்துள்ள பாதையில் மனநிறைவுடன் இருக்கிறேன். எதிர்காலத்தில் வரவிருப்பவற்றை வரவேற்க ஆவலாக உள்ளேன்” என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தனது மறைந்த தந்தையின் மறைவுக்குப் பின்னர் வரும் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு உருக்கமான அஞ்சலியையும் காஞ்சன விஜேசேகர செலுத்தியுள்ளார்.
“அவர் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும், எப்போதும் எமது இதயங்களில் வாழ்வார். என்றும் நினைவுகூரப்படுவார், என்றும் அன்புடன் நேசிக்கப்படுவார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயமும் ஏதோவொரு நோக்கத்தைக் கொண்டிருப்பதாகவும், சில அனுபவங்கள் பாடங்களைக் கற்றுத்தருகின்றன, சில அனுபவங்கள் ஒருவரைச் செதுக்குகின்றன, இன்னும் சில புதிய பயணங்களுக்குத் தயார்படுத்துகின்றன என்றும் அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
“இன்று நினைவுகூரல், சுயபரிசீலனை மற்றும் நன்றியுணர்வுக்கான ஒரு நாள்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.










