கென்யாவின் மகாடி பகுதியில் நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் Tata Chemicals நிறுவனத்தின் சுரங்க நடவடிக்கைகள் தற்போது கடுமையான அரசாங்க கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளன. கென்யா அரசாங்கம் கடந்த ஜூலை மாதம் நிறுவனத்தின் சுரங்க நடவடிக்கைகளை இடைநிறுத்தியதுடன், ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ செப்டம்பர் மாதம் நிறுவனம் கென்யாவில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார். மகாடி ஏரிப் பகுதியில் இருந்து சோடா ஆஷ் எனப்படும் கனிமம் எடுக்கப்பட்டு வருகிறது.
கென்யா அரசாங்கத்தின் பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்று, தற்போதைய சுரங்கச் சட்டங்களுக்கு ஏற்ப தேவையான கனிம உரிமத்தை Tata Chemicals பெற்றிருக்கவில்லை என்பதாகும். இதற்கு மேலதிகமாக, கனிம வளத்துக்கான ரோயல்டி தொகைகள், சமூக அபிவிருத்தி ஒப்பந்தங்கள், கென்ய பிரஜைகளுக்கான வேலைவாய்ப்புகள், உள்ளூர் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்தல், சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் கனிமத்தை உள்நாட்டிலேயே பதப்படுத்துவது தொடர்பான விடயங்களிலும் பிரச்சினைகள் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மகாடியில் சோடா ஆஷ் உற்பத்தி 1911ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகிறது. Tata Chemicals 2005ஆம் ஆண்டு இந்த நடவடிக்கையை கையகப்படுத்தியது. நிறுவனம் நேரடியாக நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன், மகாடி பகுதியில் குடிநீர், சுகாதாரம், கல்வி மற்றும் புலமைப்பரிசில் உள்ளிட்ட சில சமூக சேவைகளுக்கும் ஆதரவளித்து வந்துள்ளது. இதனால், நிறுவனத்தை அகற்றுவது தொடர்பான அரசாங்க நடவடிக்கையை சிலர் வரவேற்றாலும், Tata நிறுவனத்தை நம்பியுள்ள சமூக சேவைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படலாம் என மற்றொரு தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
மகாடி மக்கள் மத்தியில் நீண்டகாலமாக நிலவி வரும் முக்கிய குற்றச்சாட்டுகளில் வேலைவாய்ப்பு, குடிநீர், நிலப் பயன்பாடு, சமூக அபிவிருத்தி மற்றும் கனிம வளத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தில் உள்ளூர் மக்களுக்கான பங்கு ஆகியவை அடங்குகின்றன. சில உள்ளூர் பிரதிநிதிகள், சமூகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரோயல்டி பங்குகள் மற்றும் அபிவிருத்தி ஒப்பந்தங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் கூறுகின்றனர். அதேவேளை, Tata Chemicals நிறுவனம் விதிமுறைகளை புறக்கணித்ததாகக் கூறப்படுவதை மறுத்து, அரசாங்கத்துடன் இணைந்து பிரச்சினைகளைத் தீர்க்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
தற்போது கென்ய அரசாங்கமும் Tata Chemicals நிறுவனமும் இணைந்து அமைத்துள்ள தொழில்நுட்பக் குழு, நிலுவையில் உள்ள ரோயல்டி, சமூக அபிவிருத்தி ஒப்பந்தங்கள், கென்யர்களுக்கான வேலைவாய்ப்பு, உள்ளூர் கொள்வனவு மற்றும் உள்நாட்டு மதிப்புக் கூட்டல் உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து வருகிறது. எதிர்காலத்தில் புதிய முதலீட்டாளர்கள் வந்தால், சோடா ஆஷை வெறுமனே ஏற்றுமதி செய்வதை விட, கண்ணாடி மற்றும் இரசாயன உற்பத்தியை கென்யாவிலேயே மேற்கொண்டு அதிக வேலைவாய்ப்புகளையும் பொருளாதாரப் பலன்களையும் உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.









