ஈரானைச் சுற்றியுள்ள மோதல் நிலைமையால் பாதிக்கப்பட்ட கப்பல்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பில் தெற்காசிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் முன்னிலை சோசலிசக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஒக்டோபர் 9ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், ஈரானுடன் தொடர்புடைய சுமார் 15 முதல் 25 எண்ணெய்க் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்கு அப்பால் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகக் கட்சி குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக, குறித்த கப்பல்களால் தமது பயணங்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில கப்பல்களில் உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவருவதாகவும், அவற்றுக்கு உதவி வழங்குமாறு இலங்கையிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாகக் கட்சி கூறியுள்ளது. எனினும், இதுவரை உத்தியோகபூர்வமான எந்தவொரு உதவிக் கோரிக்கையும் கிடைக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரானியக் கப்பல்களுக்கு உதவி வழங்க வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்ததாக தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டிருந்ததையும் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், இவ்வாறான அழுத்தங்கள் எதுவும் பிரயோகிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மறுத்திருந்தார்.
இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ள முன்னிலை சோசலிசக் கட்சி, புவிசார் அரசியல் முரண்பாடுகளில் இலங்கை சிக்கிக்கொள்வதைத் தவிர்த்து, உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
அத்துடன், இலங்கை மற்றும் இந்தியாவின் ஆதரவுடன் 1971ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட முயற்சியை நினைவுகூர்ந்து, இந்து சமுத்திரத்தை அமைதி வலயமாக மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கட்சி முன்மொழிந்துள்ளது.
தற்போதைய நிலைமைக்குத் தீர்வு காண்பதற்கும், பிராந்திய ரீதியில் ஒருங்கிணைந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் தெற்காசிய நாடுகளுடன் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யுமாறும் அரசாங்கத்திடம் முன்னிலை சோசலிசக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.










