கொழும்பு 7, பார்ன்ஸ் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள பெறுமதியான காணியொன்றை போலி உறுதிப் பத்திரங்களைப் பயன்படுத்தி மோசடியாக விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில், நுகேகொடையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று வியாழக்கிழமை கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற நடவடிக்கைகளின்படி, குறித்த காணியைப் பிரபல நிறுவனமொன்றுக்கு மோசடியாக விற்பனை செய்வதற்கு உதவியமைக்காக, பிரதான சந்தேகநபரிடமிருந்து ஏழு சொகுசு வாகனங்களையும் 56.5 மில்லியன் ரூபாய் பணத்தையும் பெற்றுக்கொண்டதாக இந்த வர்த்தகர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பு 7, பார்ன்ஸ் பிளேஸ் பகுதியில் சுமார் 79.71 பேர்ச்சஸ் பரப்பளவைக் கொண்ட காணி தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
போலி உறுதிப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபரை நவம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.










