நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக, 15 மில்லியன் ரூபாய் பணமோசடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு, விசாரணை தொடர்பான ஆவணங்களின் பிரதிகள் சட்ட ஆலோசனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
சட்டமா அதிபரிடமிருந்து மேலதிக ஆலோசனைகளைப் பெறுவதற்காக மற்றுமொரு திகதியை வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை விடுத்தது. இதனைப் பரிசீலித்த நீதவான், வழக்கை 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சட்டவிரோதமான வழிகளில் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 15 மில்லியன் ரூபாய் பணம், என்.ஆர். கன்சல்டன்சி (N.R. Consultancy) நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டதாகவும், இது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்கவினால், குற்றவியல் முறைகேடு மற்றும் பணமோசடி தொடர்பில் 2015ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த வழக்கில் நாமல் ராஜபக்ஷ, நித்யா சேனானி சமரநாயக்க, சுஜானி பொகொல்லாகம மற்றும் சுதர்ஷன பண்டார கணேகொட ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையின்போது நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்படாத நிலையில், ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.










