கொபெய்கனே, பெத்தேகம பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபர் ஒருவரைக் பிரதேசவாசிகள் பிடித்து கொபெய்கனே பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், பொலிஸ் காவலில் இருந்த அச்சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நண்பகல் வேளையில் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட அச்சந்தேகநபர் கொபெய்கனே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் இரண்டு நாட்களாக அவர் பொலிஸ் காவலில் இருந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அவர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபரின் மரணத்தைத் தொடர்ந்து, அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பிரதேசவாசிகள் ஐவரை கொபெய்கனே பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து ஒரு மணித்தியாலத்திற்குள் பொலிஸாருக்கு அறிவித்து, எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகவே பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகக் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், பிரதேசவாசிகளால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், அவர் உயிரிழப்பதற்கு முன்பே வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கு முன்னரும் உயிரிழந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட திருட்டுகள் குறித்து பலமுறை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதாகவும், அப்போது அவரைப் பிடித்துத் தன்னிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரே அறிவுறுத்தியதாகவும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்










