மாலைதீவில் இரண்டு கிலோகிராமிற்கும் அதிகமான தங்கத்தை கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, ஓராண்டு சிறைத்தண்டனையை முழுமையாக அனுபவித்த இலங்கையர் ஒருவரை மாலைதீவு உயர் நீதிமன்றம் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது.
மாலைதீவு ஊடகங்களின் தகவலின்படி, மொஹமட் சுலைமான் என அடையாளம் காணப்பட்ட குறித்த இலங்கையருக்கு எதிராக, கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி குற்றவியல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனையை, 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.
இந்தச் சம்பவம் 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. டுபாய் ஊடாக எமிரேட்ஸ் விமானத்தில் மாலைதீவின் வேலானா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த இலங்கையர், பச்சை வழித்தடத்தின் ஊடாக வெளியேற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இதன்போது, அவரது ஜீன்ஸ் காற்சட்டைப் பைகளிலும் உள்ளாடைக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,282 கிராம் தங்கப் பசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாலைதீவு சுங்கச் சட்டத்தின் 97(அ) பிரிவின் கீழ் பொருட்களைக் கடத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், குறித்த குற்றச்சாட்டு, சட்டரீதியாகக் கடத்தல் குற்றத்தை நிரூபிப்பதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என உயர் நீதிமன்றம் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
குறித்த தங்கம் தடைசெய்யப்பட்ட பொருள் அல்ல என்பதையும், அதற்கு சுங்க வரி விதிக்கப்படவில்லை என்பதையும் அரச தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அறிவிக்கப்படாத தங்கத்தை அனுமதியற்ற பொருளாகக் கருத முடியும் என்ற அரச தரப்பின் வாதத்தையும் நிராகரித்த நீதிமன்றம், சட்டத்தில் தெளிவாகக் குற்றமாக வரையறுக்கப்படாத ஒரு செயலைக் குற்றமாக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
மேலும், குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு ஏற்பாடுகளை மீறியுள்ளதாகக் குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், அந்தத் தீர்ப்பை இரத்துச் செய்து இலங்கையரை விடுதலை செய்துள்ளது. மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த இலங்கையர் கீழ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட முழுமையான ஓராண்டு சிறைத்தண்டனையையும் ஏற்கனவே அனுபவித்து முடித்திருந்த நிலையில், இந்த விடுதலைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










