கொழும்புக்கு வெளியேயும் பொதுப் போக்குவரத்துச் சேவையை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் மெட்ரோ பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆரம்பகட்டக் கலந்துரையாடல்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாகாண போக்குவரத்து அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸ் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இச்சேவையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பொருத்தமான பேருந்து வழித்தடங்களைத் தெரிவு செய்வது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், முன்மொழியப்பட்ட வழித்தடங்களின் பொருத்தப்பாட்டை மதிப்பிடும் நோக்கில் பரீட்சார்த்த பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 2027ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் மெட்ரோ பேருந்து சேவையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்தும் இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக கண்டியும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஏற்கனவே ஒரு மாதகால பரீட்சார்த்த சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது இச்சேவைக்குப் பொருத்தமான வழித்தடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் 10 பேருந்துகளுடன் கொழும்பில் மெட்ரோ பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், பின்னர் பேருந்துகளின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிக்கப்பட்டு தற்போது சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
மேலும், 2029ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தும் வகையில், நாட்டின் ஏனைய முக்கிய நகரங்களுக்கும் மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்துவதற்கான செயல் திட்டம் அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.









