உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, முதலாவது ஒப்பந்தம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் அமெரிக்காவின் Southern Illinois பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் சபைக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ளது.
கல்விசார் சிறப்பை மேம்படுத்துதல், அறிவுப் பரிமாற்றம் மற்றும் கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன் ஊடாக கூட்டு ஆராய்ச்சி மற்றும் கல்விசார் செயற்பாடுகளை முன்னெடுத்தல், ஆராய்ச்சி, விரிவுரைகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக கல்விசார் பணியாளர்களைப் பரிமாறிக்கொள்ளுதல், பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிப் பரிமாற்றங்களை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் ஆய்வரங்குகளை ஏற்பாடு செய்வதுடன், தகவல் பரிமாற்றத்தையும் மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தத்திற்கான முன்மொழிவை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்துள்ளார்.
இதேவேளை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் George Mason பல்கலைக்கழகத்திற்கும் இலங்கையின் ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஊடாக கூட்டு ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல், தொழில்நுட்பத் துறையில் காணப்படும் சவால்களை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.
குறிப்பாக, இணையப் பாதுகாப்பு, ஆளில்லா விமானங்கள், விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் மற்றும் 5G தொடர்பாடல் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தம், இரு நிறுவனங்களுக்கும் இடையில் பரஸ்பர நன்மை பயக்கும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முன்மொழிவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.









