மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக கடுகண்ணாவை பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி, இன்று புதன்கிழமை காலை 6.00 மணி முதல் மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாகப் பாறைகள் சரிந்து விழுதல், மண் சரிவுகள் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோசன் கோபுரத்திற்கு அருகிலும், மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேத்தென்ன சந்தியிலும் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவை – கணேத்தென்ன பகுதியின் ஒரு வழித்தடத்தை மாத்திரம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.
குறித்த வீதியில் பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் மண் சரிவு ஏற்படுவதற்கான அபாயம் தொடர்பில் நேரடியாகக் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில், நிலவும் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு இரவு நேரங்களில் குறித்த வீதி மூடப்படும் எனவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, பாதிக்கப்பட்ட வீதிப் பகுதியில் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கும் வகையில், சாரதிகள் முடிந்தவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.










