நுவரெலியா மகஸ்தோட்ட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் 27 வயதுடைய பெண் ஒருவர் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அவரது காதலனைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பாறையைச் சேர்ந்த பியுமி தில்ஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த பெண் தனது காதலனுடன் கடந்த நவம்பர் 7ஆம் திகதி சுற்றுலா விடுதிக்கு வந்து, தேவையான கட்டணத்தைச் செலுத்தி அறையை முன்பதிவு செய்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை விடுதியின் உரிமையாளர் அறைக்குள் காயங்களுடன் பெண் ஒருவர் கிடப்பதைக் கண்டறிந்து, உடனடியாக நுவரெலியா பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனைகளின் போது பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
நுவரெலியாவைச் சேர்ந்த குறித்த பெண்ணின் காதலன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் பிரேத பரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் நுவரெலியா நீதவான் சம்பவ இடத்தைப் பார்வையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (படம் AI)










