2026 கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி சம்பியன் பட்டம் வென்றதை அடுத்து இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேடையில் நின்ற விதம் பெரும் அவதானத்தைப் பெற்றுள்ளது.
மெட்லைஃப் (MetLife) மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் மேலதிக நேரத்தில் வீழ்த்தி ஸ்பெயின் அணி தனது இரண்டாவது உலகக்கிண்ண பட்டத்தை முத்தமிட்டது.
போட்டி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மற்றும் ஏனைய முக்கிய தலைவர்களுடன் இணைந்து வீரர்களுக்கு பதக்கங்களையும் உலகக்கிண்ணத்தையும் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்பும் கலந்துகொண்டார்.
இருப்பினும், கிண்ணம் கையளிக்கப்பட்டதன் பின்னர், ஸ்பெயின் அணியின் தலைவர் ரொட்ரி (Rodri) அதனை மேல்நோக்கி உயர்த்தி கொண்டாடுவதற்கு தயாரான சமயத்திலும், ஜனாதிபதி ட்ரம்ப் மேடையை விட்டு நகராமல் அங்கேயே இருந்தமை அங்கிருந்தோரிடையே ஒரு சங்கடமான (Awkward) சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது.
இதன் போது, கிண்ணம் உயர்த்தப்படுவதற்கு சில கணங்களுக்கு முன்னர், ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோ தலையிட்டு, ஜனாதிபதி ட்ரம்பை அங்கிருந்து நகர்த்திச் செல்வதை தொலைக்காட்சி காண்பித்துள்ளன.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி வருவதுடன், ஸ்பெயின் அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஜனாதிபதி ட்ரம்ப் “ஃபோட்டோபாம்” (Photo-bomb) செய்துள்ளதாக பல பயனர்கள் விவரித்து வருகின்றனர். அத்துடன், பல சர்வதேச ஊடகங்களும் இந்த அசாதாரண தருணத்தை தங்களது செய்திகளில் முதன்மைப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவில் நடைபெற்ற இந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததோடு, ஏனைய உலகத் தலைவர்களுடன் இணைந்து பரிசளிப்பு நிகழ்விலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.