கொழும்பு பேஸ்லைன் வீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் தாமதமடைவதற்கான காரணங்களை கொழும்பு மாநகர சபை (CMC) தெளிவுபடுத்தியுள்ளது. நிலத்துக்கு அடியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பல்வேறு சேவை வலையமைப்புகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்களே இந்தத் தாமதத்துக்கான முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெல்லி பால்தசார் (Vraîe Cally Balthazaar) தெரிவிக்கையில்,
கிருலப்பனை மற்றும் கிருலா–நாரஹேன்பிட்டிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் இரண்டு முக்கிய நிலத்தடி கழிவுநீர் முகாமைத்துவத் திட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்தக் கட்டுமானப் பணிகள் இடம்பெறுகின்றன. பெரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டுத் திட்டத்தின் கீழ், சுமார் 25 பில்லியன் ரூபா மொத்த முதலீட்டில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதில், சுமார் 14.5 பில்லியன் ரூபா பெறுமதியான கிருலப்பனைத் திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் நிதியளிப்பதுடன், சுமார் 10 பில்லியன் ரூபா பெறுமதியான கிருலா–நாரஹேன்பிட்டிய திட்டத்துக்கு ஐரோப்பிய முதலீட்டு வங்கி நிதியுதவி வழங்குகின்றது. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை நிலத்தடி குழாய் வலையமைப்புகள் ஊடாகச் சேகரித்து, உந்துநிலையங்களுக்குக் கொண்டு சென்று முறையாக முகாமைத்துவம் செய்து பாதுகாப்பாக வெளியேற்றுவதே இத்திட்டங்களின் பிரதான நோக்கமாகும் என தெரிவித்தார்.
பேஸ்லைன் வீதியில் பணிகள் தாமதமடைவதற்கான காரணத்தை விளக்கிய மாநகர முதல்வர், நிலத்துக்கு அடியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின்சாரக் கேபிள்கள், குடிநீர் குழாய்கள், தொலைத்தொடர்புக் கேபிள்கள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை அடையாளம் காண்பதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இவற்றை அடையாளம் காண்பதற்காக இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, ஸ்ரீலங்கா டெலிகொம், டயலொக் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுடன் கொழும்பு மாநகர சபை இணைந்து செயற்பட்டு வருகின்றது. எனினும், பல்வேறு தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், சில நிலத்தடி சேவைக் கட்டமைப்புகளின் இருப்பிடங்களைத் துல்லியமாகக் கண்டறிவதில் சிரமங்கள் நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.
நிலத்தடி சேவைக் கட்டமைப்புகளைத் துல்லியமாக அடையாளம் காணாமல் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க முடியாது எனவும், அவ்வாறு செயற்பட்டால் மின்சாரம், நீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடைப்படுவதுடன், பாரிய பாதுகாப்பு அபாயங்களும் ஏற்படக்கூடும் எனவும் மாநகர முதல்வர் சுட்டிக்காட்டினார்.
பேஸ்லைன் வீதியிலான குழாய் அமைப்புப் பணிகளை 2026 டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்வதே இலக்காகக் கொண்டுள்ளதாகவும், எனினும் ஒட்டுமொத்த கழிவுநீர் அபிவிருத்தித் திட்டங்கள் அதற்குப் பின்னரும் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிருலப்பனைத் திட்டம், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டதாகவும் மாநகர முதல்வர் குறிப்பிட்டார். நிதி மற்றும் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2025 ஒக்டோபர் மாதம் மீண்டும் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதற்கிடையில், களிங்க மாவத்தை கழிவுநீர் உந்துநிலையத்தை அண்மித்த பகுதிகள் உள்ளிட்ட திட்டப் பிரதேசங்களில் வசிக்கும் 26 குடும்பங்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இக்குடும்பங்களுக்கு மாற்று வீடுகளில் தங்குவதற்கான வாடகை உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்புடைய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர் அவர்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமானப் பணிகளின்போது சேதமடைந்த தலகொட்டுவ கார்டன்ஸ் வீதியின் பகுதிகள், தேவையான பணிகள் நிறைவடைந்ததும் மீளமைக்கப்படும் எனவும் மாநகர முதல்வர் உறுதியளித்துள்ளார்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், தனியான வெளிப்புற மேற்பார்வை நிறுவனமொன்றை நியமிக்காமல் கொழும்பு மாநகர சபை அதிகாரிகளே நேரடியாகப் பணிகளை மேற்பார்வை செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிருலப்பனை கழிவுநீர் திட்டத்தை 2027 டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், கிருலா–நாரஹேன்பிட்டிய திட்டத்தை 2028 ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
வீதிகளில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகள் மற்றும் போக்குவரத்துத் தடைகளால் பொதுமக்களுக்கும் வாகன சாரதிகளுக்கும் ஏற்படும் அசௌகரியங்களை ஏற்றுக்கொண்ட மாநகர முதல்வர், அவர்களின் பொறுமைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார். கொழும்பு நகரின் நீண்டகால கழிவுநீர் முகாமைத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இத்திட்டங்கள் அத்தியாவசியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.










