இலங்கையில் நீர்வெறுப்பு நோயை ஒழிப்பதுடன், நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி அவற்றை முறையாக பதிவு செய்வதற்கான புதிய சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தின் கீழ், நாய்களுக்கு ஆண்டுதோறும் நீர்வெறுப்பு தடுப்பூசி செலுத்துவதும், அவற்றை சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்படவுள்ளது. ஆறு வாரங்களுக்கு மேற்பட்ட வயதுடைய நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி பதிவு செய்வது அவற்றின் உரிமையாளர்கள் அல்லது பொறுப்பாளர்களின் கடமையாக நிர்ணயிக்கப்படவுள்ளது.
மேலும், தெருநாய்களை கருத்தடை செய்வதற்கான நடவடிக்கைகளை உள்ளூராட்சி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் சட்டமூலம் முன்மொழிகிறது. கருத்தடை செய்யப்பட்ட பின்னர் அவை மீண்டும் பிடிக்கப்பட்ட அதே இடத்தில் விடப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாய்களை விற்பனை செய்வதற்காக வளர்ப்பு மையங்களை நடத்துவதற்கும் உள்ளூராட்சி நிறுவனங்களிடமிருந்து உரிமம் பெற வேண்டியிருக்கும்.
இதற்காக நீர்வெறுப்பு ஒழிப்பு தொடர்பான தேசிய மற்றும் பிராந்திய ஆலோசனைக் குழுக்களை அமைப்பதற்கும் சட்டமூலம் வழிவகுக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள Rabies Ordinance மற்றும் Dogs Registration Ordinance ஆகியவற்றை நீக்கி புதிய சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்துவது இதன் நோக்கமாகும். சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.









