அகில இலங்கை கலைப்போட்டியின் ஒட்டுச் சித்திரம் (Drawing) பிரிவில், சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலய மாணவன் எம்.ஜே.எம். முஹஸ்ஸின் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தரம் 12–13 பிரிவில் போட்டியிடும் எம்.ஜே.எம். முஹஸ்ஸின், 2024, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகில இலங்கை கலைப்போட்டிகளில் சம்மாந்துறை கல்வி வலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒட்டுச் சித்திரம் (Drawing) பிரிவில் கிழக்கு மாகாண மட்டத்தில் தொடர்ச்சியாக முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான கலைப்போட்டியில் சுமார் 800 மாணவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், சம்மாந்துறை கல்வி வலய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் படைப்புகள் கிழக்கு மாகாண மட்டப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில், ஒட்டுச் சித்திரம் (Drawing) பிரிவில் பங்கேற்ற எம்.ஜே.எம். முஹஸ்ஸின் தனது திறமையை வெளிப்படுத்தி கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
கலைத்துறையில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வரும் மாணவன் முஹஸ்ஸினின் இந்தத் தொடர் சாதனைக்கு வழிகாட்டியாக செயற்பட்ட ஆசிரியை நஸ்மிலா, சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலய அதிபர் இஸ்மாயில் மற்றும் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திர குமார் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளமை, மாணவனின் கலைத்துறை திறமைக்கும் தொடர்ச்சியான பயிற்சிக்கும் கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.










