பேராதனை கறுப்புப் பாலத்துக்கு (களுப்பாலம்) இணையாக புகையிரத போக்குவரத்துக்காக புதிய பாலமொன்றை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய பாலத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு வடிவமைப்புகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து, விசேட புகையிரதத்தில் பேராதனை புகையிர நிலையத்தை சென்றடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக ரம்புக்கனை முதல் பேராதனை வரையிலான மலையக புகையிர பாதையில் புகையிர சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் புகையிர போக்குவரத்துக்காக அந்தப் பாதை திறக்கப்பட்டுள்ளது.
இதன் அடையாளமாக கொழும்பு கோட்டையிலிருந்து விசேட புகையிரதத்தில் பேராதனைக்கு சென்ற அமைச்சர், அங்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
பேராதனை கறுப்புப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு காரணங்களால் பணிகளில் தாமதம் ஏற்பட்டிருந்த போதிலும், அவற்றை விரைவாக நிறைவு செய்வதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், புகையிர திணைக்களத்தின் உட்கட்டமைப்பு மற்றும் புகையிர போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கும், புகையிர ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் காரணமாக புகையிர ஊழியர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். புகையிர பாதை நிர்மாணப் பணிகளை சிலர் விமர்சிப்பதைப் போன்று மிக வேகமாக முன்னெடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.










