புதிதாக நியமிக்கப்பட்ட 1,056 குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விசேட நிகழ்வு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி அலரி மாளிகை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஒன்றரை வருட காலப்பகுதியில் முறையான மற்றும் விரிவான பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னரே குறித்த அதிகாரிகளுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
இவர்கள் நாடளாவிய ரீதியில் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களிலும், மத்திய அரசின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களிலும் பணிக்கு இணைக்கப்படவுள்ளனர்.
தாய் மற்றும் குழந்தை நலப் பராமரிப்பு உள்ளிட்ட சமூக சுகாதார சேவைகளில் குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். பொதுமக்களுக்கு அருகிலேயே தொடர்ச்சியான சுகாதார சேவைகளை வழங்குவதில் இவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
புதிதாக 1,056 அதிகாரிகள் சுகாதார சேவையில் இணைக்கப்படுவதன் மூலம், நாட்டின் சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










