அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இந்திரன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கற்றல்–கற்பித்தல் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
“சிறுவர்களின் வண்ணக் கனவுகளுக்கு சிறகு கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்திரன் அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளருமான இந்திரன் ரூபசாந்தன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் நாவிதன்வெளி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று, அதிபர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கான கற்றல்–கற்பித்தல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய இந்திரன் ரூபசாந்தன்,
“இன்றைய நாள் வெறும் ஒரு கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; எமது எதிர்காலத்தையும், எமது சமுதாயத்தின் அஸ்திவாரத்தையும் போற்றிப் பாதுகாக்கும் புனிதமான நாள்.” எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், குழந்தைகள் இறைவனின் அலாதியான படைப்பு எனவும், அவர்களின் கலங்கமில்லாத புன்னகையும் கள்ளங்கபடமற்ற உள்ளமும் உலகை எப்போதும் அழகாகவும் புதியதாகவும் வைத்திருக்கின்றன எனவும் தெரிவித்தார்.
சிறுவர்களின் உலகில் பொறாமை, கபடம் மற்றும் வெறுப்பைவிட அன்பும் மகிழ்ச்சியும் மேலோங்கி நிற்பதாகக் குறிப்பிட்ட அவர், சிறுவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் தரமான கல்வி ஆகியவற்றை உறுதி செய்வது அனைவரினதும் பொறுப்பு என வலியுறுத்தினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“குழந்தைகள் வெறும் களிமண் போன்றவர்கள். அவர்களை சிறந்த சிற்பங்களாகச் செதுக்கும் பொறுப்பு பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் உள்ளது. புத்தகக் கல்வியுடன் நல்லொழுக்கம், அன்பு, சக மனிதர்களை மதிக்கும் பண்பு ஆகியவற்றையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.”என்றார்.
அத்துடன், மாணவர்கள் நன்றாகக் கற்று, விளையாட்டிலும் ஈடுபட்டு, புதிய விடயங்களை கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்தும் சான்றோர்களாக உயர வேண்டும் எனவும் அவர் வாழ்த்தினார்.
நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் தரமான கல்வி வசதிகளைக் கொண்ட சூழலில் வளர்வதை உறுதி செய்வதற்காக நாவிதன்வெளி பிரதேச சபை தொடர்ந்தும் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி என்பது ஒவ்வொரு சிறுவனதும் சிறுமியினதும் அடிப்படை உரிமை என்பதையும், அந்த உரிமையை ஊக்குவித்து பாதுகாப்பது சமூகத்தின் பொறுப்பு என்பதையும் இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
சிறுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்களை மகிழ்விப்பதுடன், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான ஆதரவை வழங்கும் நோக்கில் இந்திரன் அறக்கட்டளையினால் வருடாந்தம் கற்றல்–கற்பித்தல் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் உறுப்பினர்களான கே. உதயகுமார், ரீ. கிருபாகரன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.










