இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்திடமிருந்து (OPEC Fund for International Development) 30 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடனைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பேரினப் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தல், நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
இந்தக் கடனில் 24 மில்லியன் அமெரிக்க டொலர் சாதாரண மூலதன வளங்களின் (Ordinary Capital Resources) ஊடாகவும், எஞ்சிய 6 மில்லியன் அமெரிக்க டொலர் விசேட மூலதன வளங்களின் (Special Capital Resources) ஊடாகவும் வழங்கப்படவுள்ளது.
உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்படும் ‘வளர்ச்சி, மீள்திறன் மற்றும் திறந்த பொருளாதாரத்திற்கான இலங்கை மறுசீரமைப்புத் திட்டத்தின்’ (Sri Lanka Reforms for Growth, Resilience and Openness Development Policy Operation) கீழான நிதியுதவிக்கு மேலதிகமாக இந்தக் கடனுதவி அமையவுள்ளது.
இந்தக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பிரேரணையை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்திருந்தார்.










