இலங்கையின் 24 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதால், இன்று செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இதன்படி, மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாகவும், இதன்போது பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தைத் தவிர்ந்த ஏனைய 24 மாவட்டங்களின் அனைத்து அல்லது சில பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது வெளிப்புறச் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதுடன், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளிலும் இடையூறுகள் ஏற்படக்கூடும். மேலும், மின்சாதனங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் திறந்தவெளிகளில் இருப்பவர்கள் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி படுகாயமடையவோ அல்லது உயிரிழக்கவோ நேரிடலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- இடியுடன் கூடிய மழை நெருங்கும்போது வெளிப்புற விளையாட்டுகள், கட்டுமானப் பணிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும்.
- பாதுகாப்பான கட்டடங்களுக்குள் அல்லது கூரையுடன் கூடிய மூடப்பட்ட வாகனங்களுக்குள் தஞ்சமடைய வேண்டும்.
- கடற்கரைகள், நீச்சல் பகுதிகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் ஏனைய நீர்நிலைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
- தனியாக நிற்கும் மரங்கள், கூடாரங்கள் மற்றும் திறந்த கொட்டகைகளின் கீழ் தஞ்சமடையக் கூடாது.
- மின்சாதனங்கள், நீர்க்குழாய்கள் மற்றும் மின்சார இணைப்புகளிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
- வெளிப்புற நிகழ்வுகளை இரத்துச் செய்யவோ அல்லது பாதுகாப்பான உள்ளக இடங்களுக்கு மாற்றவோ வேண்டும்.
- சிறுவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர்களை வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
இந்த எச்சரிக்கையை அதிக நிகழ்தகவு மற்றும் மிதமான பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் என வளிமண்டலவியல் திணைக்களம் வகைப்படுத்தியுள்ளது.
வானிலை தொடர்பான அடுத்த அறிவிப்பு இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











