முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக் கோரும் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை பலவீனமானதாகவும் பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் உள்ளதாக விமர்சித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இம்ரான் கானின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா முன்வைத்த பிரேரணைக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து அதிருப்தி வெளியிட்டார்.
இந்த விவாதம் நடத்தப்பட்டால் பாகிஸ்தானுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அஜித் பி. பெரேரா தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கையுடன் இருதரப்பு உறவுகளைப் பேணிவரும் நாடுகளுடன் இராஜதந்திர ரீதியான பதற்றங்களை ஏற்படுத்தக்கூடிய விடயங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதில் அரசாங்கம் தயக்கம் காட்டுவதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டைக் கேள்விக்குட்படுத்திய ரவூப் ஹக்கீம், பாகிஸ்தான் நீண்டகாலமாக இலங்கையின் நட்பு நாடாக இருந்து வருவதுடன், இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்ட பல சந்தர்ப்பங்களில் ஆதரவளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தைப் பாதித்த கட்டாய தகனக் கொள்கை தொடர்பில் பாகிஸ்தான் வழங்கிய ஆதரவையும் அவர் நினைவுகூர்ந்தார்.
கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பதிலாகத் தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முக்கிய பங்காற்றியதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இம்ரான் கானின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தின்போது அவர் மேற்கொண்ட தலையீட்டைத் தொடர்ந்து, அப்போதைய இலங்கை அரசாங்கம் குறித்த கொள்கையை மாற்றியமைத்து, கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம்ரான் கானின் இந்தப் பங்களிப்பை இலங்கை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இதனை ஏன் சபையில் விவாதிக்க முடியாது? நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய ரவூப் ஹக்கீம், மற்றொரு நாட்டுடன் நட்புறவைப் பேணுவது, அந்த நாட்டில் இடம்பெறுவதாகக் கூறப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்றார்.
குறிப்பிட்ட ஓர் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு இருக்கக் கூடாது எனவும், நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை பரஸ்பர கொடுக்கல் வாங்கல்களை விட கொள்கைகள் மற்றும் அடிப்படை விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பல சர்வதேச விவகாரங்களில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் நிலைப்பாட்டையும் அவர் விமர்சித்தார். குறிப்பாக, பலஸ்தீன விவகாரம் தொடர்பில் சர்வதேச அரங்குகளில் ஆதரவு தெரிவிக்கும் அறிக்கைகளை வெளியிடுவது மாத்திரம் போதுமானதல்ல என்றும், உள்நாட்டிலும் அதற்கேற்ற உறுதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா பலஸ்தீன விவகாரத்தில் கடைப்பிடிக்கும் அணுகுமுறையைச் சுட்டிக்காட்டிய அவர், அவருடனான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உறவைக் கருத்திற்கொண்டு, இந்த விவகாரத்தில் ஜனாதிபதி மேலும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், அமைச்சுக்கு மேலதிகமாக குறைந்தது இரண்டு செயலாளர்களை நியமிப்பது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய பொறுப்புகளையும் வெளிவிவகார அமைச்சரே கவனித்து வருவதால், இந்த மூன்று துறைகளினதும் பணிச்சுமையை ஒரே செயலாளரால் திறம்பட நிர்வகிப்பது கடினம் என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அமைச்சின் செயலாளரை விமர்சிக்கும் நோக்கில் இந்தப் பரிந்துரையை முன்வைக்கவில்லை எனத் தெளிவுபடுத்திய அவர், குறித்த செயலாளர் சிரேஷ்ட வெளிநாட்டு சேவை அதிகாரி என்றும் குறிப்பிட்டார்.
எனினும், மூன்று முக்கிய துறைகளினதும் பொறுப்புகளை ஒரே அதிகாரி திறம்பட நிர்வகிப்பது சிரமமானது என்றும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.










