இலங்கையின் முதலாவது விரிவான தேசிய மின்கலப் பரிசோதனை நிலையமான மின் இயக்கம் மற்றும் மின்கலத் தொழில்நுட்ப நிலையம் (Centre for E-Mobility and Battery Technology), விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிறிஷாந்த அபேசேன தலைமையில் நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் (NERDC) நிறுவப்பட்டுள்ள இந்தப் பரிசோதனை நிலையத்திற்காக சுமார் 161.5 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், அரசாங்கத்தின் தேசிய தர உட்கட்டமைப்பு (NQI) வலுப்படுத்தும் திட்டத்தின் ஊடாக 118 மில்லியன் ரூபாயும், NERDC நிறுவனத்தின் பங்களிப்பாக 43.5 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய மின்கலப் பரிசோதனைகளுக்கு அப்பால், நவீன மின்கலத் தொழில்நுட்பங்களையும் பரிசோதிக்கும் திறனை இலங்கையில் விரிவுபடுத்துவதே இந்நிலையத்தின் முக்கிய நோக்கமாகும். இதன்மூலம் மின்சார வாகனப் போக்குவரத்து மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கு விசேட பரிசோதனைச் சேவைகளை வழங்குவதுடன், உள்நாட்டு உற்பத்தி மேம்பாடு மற்றும் உள்நாட்டு பெறுமதி சேர்க்கையை அதிகரிப்பதற்கும் இந்த நிலையம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன பரிசோதனை வசதிகளைக் கொண்டுள்ள இந்நிலையத்தில், வெவ்வேறு சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் மின்கலங்களின் செயல்திறன், கொள்ளளவு, நீடித்துழைக்கும் தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மதிப்பீடு செய்ய முடியும். அத்துடன், மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றக் கருவிகள் மற்றும் பல்வேறு வகையான மின்கலக் கட்டமைப்புகளையும் பரிசோதிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திறப்பு விழாவில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் டாக்டர் ரோஷனி திசாநாயக்க, தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் டாக்டர் சித்ரல் அம்பவத்த, பதில் பணிப்பாளர் நாயகம் மனோஜ் கருணாரத்ன உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுக் கைத்தொழில் துறையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.










