வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாகவும், அது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து, நவம்பர் 16ஆம் திகதியளவில் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, 05° வடக்கு முதல் 15° வடக்கு வரையிலும், 80° கிழக்கு முதல் 90° கிழக்கு வரையிலும் எல்லைப்படுத்தப்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீன்பிடி மற்றும் கடற்படைப் படகுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், காங்கேசன்துறை முதல் திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கடற்படைப் படகுகள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
எனவே, மீனவர்களும் கடற்படையினரும் அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










