இலங்கையில் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்தின் மூலம், ஓட்டோ டீசலின் சந்தை விலைக்கும் செலவு மீட்பு சூத்திரத்தின் அடிப்படையிலான விலைக்கும் இடையிலான வித்தியாசம் குறைந்துள்ள அதேவேளை, 92 ஒக்டேன் பெட்ரோலுக்கான விலை வித்தியாசம் அதிகரித்துள்ளதாக PublicFinance.lk தெரிவித்துள்ளது.
சுயாதீன ஆய்வு நிறுவனமான வெரிட்டே ரிசேர்ச் (Verité Research) நடத்தும் இந்தப் பொதுநிதித் தகவல் தளத்தின் தரவுகளின்படி, அண்மைய விலை அதிகரிப்புக்குப் பின்னரும் இரண்டு வகையான எரிபொருட்களும் செலவு மீட்பு சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட விலையை விடக் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
அதன் எரிபொருள் விலைக் கண்காணிப்புத் தரவுகளின்படி, நவம்பர் முதலாம் திகதி நிலவரப்படி 92 ஒக்டேன் பெட்ரோலின் சந்தை விலை லீற்றருக்கு 424 ரூபாவாகக் காணப்பட்டதுடன், செலவு மீட்பு சூத்திரத்தின் அடிப்படையிலான விலை 481 ரூபாவாக இருந்தது. இதன்படி, இரு விலைகளுக்கும் இடையில் லீற்றருக்கு 57 ரூபாய் வித்தியாசம் காணப்பட்டது.
ஒக்டோபர் மாதத்தில் 92 ஒக்டேன் பெட்ரோலின் சந்தை விலை லீற்றருக்கு 414 ரூபாவாகவும், சூத்திரத்தின் அடிப்படையிலான விலை 465 ரூபாவாகவும் காணப்பட்டது. இதன்போது விலை வித்தியாசம் 51 ரூபாவாக இருந்தது.
இதன்படி, நவம்பர் மாதத்தில் பெட்ரோலின் சில்லறை விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும், சந்தை விலைக்கும் சூத்திர விலைக்கும் இடையிலான வித்தியாசம் மேலும் 6 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஓட்டோ டீசலின் சந்தை விலை ஒக்டோபர் மாதத்தில் லீற்றருக்கு 392 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் 397 ரூபாவாக அதிகரித்துள்ளது.
எனினும், டீசலுக்கான செலவு மீட்பு சூத்திரத்தின் அடிப்படையிலான விலை ஒக்டோபர் மாதத்தில் 467 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் 459 ரூபாவாகக் குறைந்துள்ளது. இதனால் சந்தை விலைக்கும் சூத்திர விலைக்கும் இடையிலான வித்தியாசம் 75 ரூபாவிலிருந்து 62 ரூபாவாகக் குறைந்துள்ளது.
அண்மைய விலைத் திருத்தத்தின் மூலம் டீசலுக்கான விலை இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ள போதிலும், பெட்ரோல் விலை அதிகரிப்பு சந்தை விலைக்கும் சூத்திர விலைக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறைப்பதற்குப் போதுமானதாக அமையவில்லை என PublicFinance.lk சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நவம்பர் மாதத்துக்கான செலவு மீட்பு சூத்திரக் கணக்கீட்டில், பொருந்தக்கூடிய மானியங்களைக் கணக்கில் எடுத்த பின்னர், 92 ஒக்டேன் பெட்ரோலின் ஒரு லீற்றருக்கு 150 ரூபாவும், ஓட்டோ டீசலின் ஒரு லீற்றருக்கு 67 ரூபாவும் நிகர வரியாக உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தளம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இணக்கம் காணப்பட்ட எரிபொருள் விலை நிர்ணயச் சூத்திரத்தின் அடிப்படையில், சிங்கப்பூர் சந்தையின் விலை அளவுகோல்களைப் பயன்படுத்தி இந்தச் சூத்திர விலைகள் கணக்கிடப்படுகின்றன.
இலங்கை மத்திய வங்கி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO), எரிபொருள் விலைச் சூத்திரக் கணக்கீடுகள் மற்றும் நிதி அமைச்சிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.










