வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழ் இல்லாவிட்டாலும் பொதுமக்கள் புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், வாகன வருமான உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் முடியும் என நிதி அமைச்சு விசேட விளக்கமளித்துள்ளது.
TIN இலக்கம் வைத்திருந்து சான்றிதழ் இல்லாதவர்கள் தமது TIN இலக்கத்தை வழங்கலாம்; இதுவரை TIN பெறாதவர்கள் தேசிய அடையாள அட்டை எண், பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைச் சமர்ப்பித்து வங்கி மற்றும் வாகன உரிமச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
TIN சான்றிதழ் இல்லை என்பதற்காக சேவை வழங்குவதை தாமதப்படுத்தவோ அல்லது மறுக்கவோ கூடாது என நிதி அமைச்சு நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது.
நவம்பர் 1 முதல் வங்கிக் கணக்கு திறத்தல், வாகன உரிமம் புதுப்பித்தல், கடன் அட்டை பெறுதல், கட்டிடத் திட்ட அனுமதி, வாகனப் பதிவு, காணிப் பதிவு, வணிகப் பதிவு மற்றும் நிறுவனப் பங்குகளை மாற்றுதல் ஆகிய 8 பரிவர்த்தனைகளுக்கு TIN கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் இரு சேவைகளுக்கும் மேற்கூறிய விசேட தளர்வு பொருந்தும்.
கணினி மூலம் உருவாக்கப்படும் TIN சான்றிதழ்களின் அச்சிடப்பட்ட அல்லது மின்னணுப் பிரதிகள் செல்லுபடியாகும்.
அதற்கு உத்தியோகபூர்வ கையொப்பமோ, முத்திரையோ அவசியமில்லை.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் TIN பெறுவது சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், ஆண்டிற்கு 1.8 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுபவர்கள் மட்டுமே வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.










