ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் எந்தவொரு புதிய வரியையும் அறிமுகப்படுத்தவில்லை என ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கம் மூன்று புதிய வரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஏழு வரிகளையும் அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய வரிகளில்,
- சேவை ஏற்றுமதி வருமானத்திற்கு 15 சதவீத வரி.
- டிஜிட்டல் சேவைகளுக்கு 18 சதவீத பெறுமதி சேர் வரி (VAT).
- குறிப்பிட்ட தொழில்முறை சேவைகளுக்கான கொடுப்பனவுகளுக்கு 5 சதவீத நிறுத்திவைப்பு வரி (Withholding Tax).
ஆகியவை உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், வட்டி வருமானம், மூலதன ஆதாயங்கள், நிதிச் சேவைகள், மதுபானம், புகையிலை மற்றும் பந்தயம், சூதாட்டத் தொழில்கள் மீதான வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வரி மாற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் புரிதல் குறித்து கேள்வி எழுப்பிய அஜித் பி. பெரேரா, ஜனாதிபதியே நிதி அமைச்சராகவும் செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், வரிகள் தொடர்பில் ஜனாதிபதி தவறான தகவல்களை வெளியிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசாங்கம் மக்களின் மீதான வரிச்சுமையை அதிகரித்துள்ள போதிலும், சேகரிக்கப்பட்ட வரி வருமானத்தை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
இதற்கிடையில், ஆட்சிக்கு வந்த பின்னர் எந்தவொரு புதிய வரியையும் அறிமுகப்படுத்தவில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த சில வரிகளைக் கணிசமாகக் குறைத்துள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மேலும் சில வரிகளைக் குறைப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.










