தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) நிர்வாகம் மற்றும் மனித வளப் பிரிவின் பணிப்பாளர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதராகம, அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், சமபுர பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றை குத்தகைக்கு எடுத்தமை மற்றும் அதனைப் புனரமைத்தமை தொடர்பான முறைகேடுகள் காரணமாக அரசாங்கத்திற்கு 51 இலட்சம் ரூபா நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
குறித்த கட்டடத்திற்கான குத்தகை ஒப்பந்தத்தின் கீழ், 38 இலட்சம் ரூபா முறையற்ற விதத்தில் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபையின் முறையான அனுமதியின்றி கட்டடத்தைப் புனரமைப்பதற்காக 13 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக அரசாங்கத்திற்கு மொத்தம் 51 இலட்சம் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.










