2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 233 சிறுமிகள் உட்பட 11,131 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகில் போதைப்பொருள் விநியோகம் இடம்பெறுவது தொடர்பிலும் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஐஸ்கிறீம், பஞ்சுமிட்டாய் மற்றும் சரவிட்டா போன்ற உணவுப் பொருட்களில் போதைப்பொருட்களை மறைத்து வைத்து விநியோகிப்பதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கிடையில், பிள்ளைகளின் உணவுப் பழக்கவழக்கங்கள், நடத்தை, உரையாடல்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரங்களில் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான மாற்றங்கள் பிள்ளைகள் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியமான அறிகுறிகளாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.










