சிறையில் உள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, சட்ட விதிமுறைகளை மீறியதாகவும் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற குறித்த போராட்டம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகளைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா, கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன்படி, உரிய அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள், பூங்கா நிர்வாக அதிகாரிகள் தமது கடமைகளை முன்னெடுப்பதற்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சாகர தயரத்னவினால் இந்த முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி பௌத்த பிக்குகள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் விஹாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்ததுடன், உரிய அனுமதியின்றி ஒலிபெருக்கிகளையும் பயன்படுத்தியதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொரு முறைப்பாட்டில், பூங்கா வளாகத்தில் சட்டவிரோதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்களை அகற்றுவதற்கு முயன்ற மாநகர சபை அதிகாரிகளின் கடமைகளுக்குப் போராட்டக்காரர்கள் இடையூறு விளைவித்ததாகப் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்காகக் கண்காணிப்பு கமரா (CCTV) காட்சிகள் மற்றும் காணொளிப் பதிவுகளைப் பரிசோதித்து, பொறுப்பானவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த போராட்டம் தொடர்பாகக் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் முன்னதாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பான வழக்கு நடவடிக்கைகளையும் முடிவுறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போராட்டம் நிறைவடைந்துவிட்டதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.










