இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை சுமார் 7,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் பருவமழை மற்றும் பெரும்போக விவசாயச் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எலிக்காய்ச்சல் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 300 பேர் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் துஷாரி தபரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறத் தவறினால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த ஆண்டு இதுவரை இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவிலான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், சேறு நிறைந்த பகுதிகள் மற்றும் நீர் தேங்கிய இடங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்ட அனைவரும் இந்நோய் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தொற்றுநோயியல் பிரிவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகமும் கூட்டாக அறிவுறுத்தியுள்ளன.
பொதுவாக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியிலும், செப்டெம்பர் முதல் ஜனவரி வரையிலான காலப்பகுதியிலும் மழைக்காலம் மற்றும் விவசாய நடவடிக்கைகள் காரணமாக எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எலிக்காய்ச்சல் என்பது பாதிக்கப்பட்ட எலிகள் உள்ளிட்ட வீட்டு மற்றும் காட்டுவிலங்குகளின் சிறுநீரால் மாசுபட்ட நீர் அல்லது மண் ஊடாக மனிதர்களுக்குப் பரவும் ஒரு பாக்டீரியா தொற்றாகும்.
இவ்வாறு மாசடைந்த நீர் அல்லது சேற்றுடன் தொடர்பு ஏற்படும்போது, உடலில் காணப்படும் காயங்கள், வெட்டுக்கள் மற்றும் சேதமடைந்த தோல் பகுதிகள் ஊடாகவும், சளிச்சவ்வுகள் ஊடாகவும் பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழையக்கூடும்.
குறிப்பாக நெல் வயல்களில் பணியாற்றும் விவசாயிகள் மற்றும் வெள்ளநீருடன் தொடர்பு கொள்பவர்கள் இந்நோய்த்தொற்றுக்கு அதிகளவில் உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் டெங்கு மற்றும் காய்ச்சல் நோய்களின் அறிகுறிகளை ஒத்திருப்பதால், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் அவசியம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல், உடல்வலி, தொண்டை வலி, கடுமையான தலைவலி, தசை வலி, குறிப்பாக கால்கள் மற்றும் பாதங்களில் ஏற்படும் வலி, கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவ ஆலோசனையின்றி சுயமாக மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறும், சிகிச்சை பெறுவதில் ஏற்படும் தாமதம் கடுமையான பாதிப்புகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நெல் வயல்கள் மற்றும் சேறு நிறைந்த பகுதிகளில் பணியாற்றுவோர் பாதுகாப்பு காலணிகள் மற்றும் கையுறைகளைப் பயன்படுத்துதல், உடலில் உள்ள காயங்களை நீர் புகாத கட்டுகளால் மூடுதல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் தடுப்பு மருந்துகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எலிக்காய்ச்சலால் ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.










