நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி முன்னெடுக்கப்படும் மோசடித் திட்டங்கள் தொடர்பில் இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான மோசடிகளில் பலர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சில தரப்பினர் போலியான வேலைவாய்ப்பு வாக்குறுதிகளை வழங்கி வேலை தேடுவோரை ஏமாற்றி வருவதாகவும், நெதர்லாந்தின் குடிவரவு அதிகாரிகளால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போலியான கடிதங்களைப் புழக்கத்தில் விட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலான வேலைவாய்ப்புகளுக்காக நெதர்லாந்து பொதுவாக வேலை விசாக்களை வழங்குவதில்லை எனத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், உயர்திறன் மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகள் உள்ளிட்ட சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் உண்மையான வேலைவாய்ப்புகள் காணப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தூதரகம் ஈடுபடுவதில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.
எனவே, வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பணம் செலுத்துவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது வேலை வழங்குநர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதமின்றி இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் சட்ட உதவியை நாடுமாறும் நெதர்லாந்து தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.










