அநுராதபுரம் ருவன்வெலிசாய முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரரை, நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது பொலிஸ் அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக தேரர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, நேற்று புதன்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைப் பிரிவு 02இல் முன்னிலையாகுமாறு தேரருக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
உடமலுவ பொலிஸ் நிலையத்தின் ஊடாக இந்த அறிவித்தல் தேரருக்குத் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், குறித்த தினத்தில் தேரர் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகவில்லை என்பதுடன், தம்மால் முன்னிலையாக முடியாத காரணம் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாளை கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்து, உடமலுவ பொலிஸார் மீண்டும் அழைப்பாணை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ருவன்வெலிசாயவுக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளில் பலாங்கொட கஸ்ஸப தேரரும் ஒருவராவார்.










