போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்தமை, தயாரித்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை மாலை வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர சந்தியில் வைத்து, போலி சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வைத்திருந்த சந்தேகநபரை நுகேகொடை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, மேலும் 12 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் எட்டு போலி தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் முறையே 32 மற்றும் 52 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அங்கொடை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகேகொடை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.










