ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு சட்டவிரோதமாக காட்டு விலங்குகளின் இறைச்சியை விநியோகித்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர், வனஜீவராசிகள் அதிகாரிகளால் அரநாயக்க பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலத்கொஹுபிட்டிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள், அரநாயக்க – புளுகம்மன பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
இதன்போது, போர் துப்பாக்கி மற்றும் நான்கு பொறித் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஐந்து சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், 100 இற்கும் மேற்பட்ட விலங்குகளைப் பிடிப்பதற்கான கண்ணிகள், 1.5 கிலோகிராம் முள்ளம்பன்றி இறைச்சி, வெடிமருந்துத் தூள், ஈயத் துகள்கள் மற்றும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், விலங்குகளைப் பிடிப்பதற்கான பொறிகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள், வெடிகள், தீப்பெட்டிகள் மற்றும் செப்புக் கம்பிகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபர் நீண்டகாலமாக சட்டவிரோத காட்டு விலங்குகளின் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டு, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு இறைச்சியை விநியோகித்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் அரநாயக்க சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் காட்டு விலங்குகளின் இறைச்சி விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.










