நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) செயல்பாட்டுப் பிரிவு தலைவரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம்சாட்டியுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அரச நிறுவனங்களில் பில்லியன் கணக்கான ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளமை ஆகியவை அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு அருகில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாகம் தொடர்பில் புரிதலற்ற தற்பெருமை பேசும் அரசாங்கமாகவே தற்போதைய அரசாங்கம் காணப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரிகளை அதிகரிக்கவில்லை என்றும் சில வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதியளித்திருந்த போதிலும், உண்மையில் பல வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மேலதிக பொருளாதாரச் சுமைக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதை மத்திய வங்கி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துவதாகவும், இத்தகைய புள்ளிவிபரங்களை அரசாங்கத்தால் நிராகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், பல அரச நிறுவனங்கள் தற்போது பில்லியன் கணக்கான ரூபாய் நட்டத்தைச் சந்தித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
முந்தைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் தற்போதைய நிர்வாகத்தை ஒப்பிட்ட அவர், நட்டத்தில் இயங்கிய பல அரச நிறுவனங்களைத் தமது அரசாங்கம் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றியதாகக் கூறியுள்ளார்.
குறிப்பாக, தமது அரசாங்கத்தின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் சதொச நிறுவனத்தில் ஒருபோதும் நட்டம் பதிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் மக்களுக்கு வழங்குவதற்கும் சந்தை விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் சதொச நிறுவனம் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் அவ்வாறான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தவறியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், கொள்கலன் சர்ச்சை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், அந்தச் சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் எதிரிகளை இலக்குவைப்பதற்காகச் சட்ட அமுலாக்க நிறுவனங்களை அரசாங்கம் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சில நிறுவனங்கள் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து, அரசியல் பழிவாங்கல் நோக்கில் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவுகளைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகளைப் பயன்படுத்தி போலியான சாட்சியங்களை உருவாக்குவதுடன், பொய்யான வழக்குகளும் தாக்கல் செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், இத்தகைய நடவடிக்கைகள் அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு ஒப்பானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அடக்குமுறைகள் எனத் தாம் வர்ணிக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஞ்சப்போவதில்லை எனத் தெரிவித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து சாத்தியமான அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.










