கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் என்பு முறிவு சிகிச்சைப் பிரிவை (Orthopaedic Unit) நவீனமயப்படுத்தி, நோயாளர்களுக்கான இடவசதி மற்றும் சிகிச்சைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய ஆண் மற்றும் பெண் விடுதிகள் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவின் மூலம், என்பு முறிவு சிகிச்சைக்காக உள்நோயாளர்களாக அனுமதிக்கப்படும் ஆண், பெண் நோயாளர்கள் இதுவரை எதிர்கொண்ட இடநெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் நோயாளர்களுக்கான தங்குமிட வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்புச் சேவைகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல். பாறூக், என்பு முறிவு சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் டாக்டர் எஸ். வருண்பிரசாந்த், சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டவலியு. எம்.சமீம், விசேட மயக்க மருந்து நிபுணர் டாக்டர் கே. சுதேஸ்வரி உள்ளிட்ட வைத்திய நிபுணர்கள், பிரிவுகளுக்குப் பொறுப்பான வைத்தியர்கள், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், தாதிய பரிபாலகி, தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவ, நிர்வாகப் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பிராந்திய மக்களுக்கு தடையற்றதும் தரமானதுமான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ச்சியாக மேம்படுத்தி வரும் நிலையில், என்பு முறிவு சிகிச்சைப் பிரிவின் விரிவாக்கமும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இந்த முன்னெடுப்பு, பிராந்திய மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்துவதுடன், நோயாளர் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் மற்றுமொரு நடவடிக்கையாகவும் அமைந்துள்ளது.










