1765ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது டச்சுப் படையினரால் கொள்ளையிடப்பட்டதாக நம்பப்படும் இலங்கைக்குச் சொந்தமான இரண்டு நூற்றாண்டுகள் பழமையான பீரங்கிகளை மீளக் கையளிக்க நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ்மியூசியத்தில் (Rijksmuseum) தற்போது வைக்கப்பட்டுள்ள இந்த ஆயுதங்கள், இலங்கையின் பாரம்பரிய ‘மகா துவக்கு’ (Maha Thuwakku) எனப்படும் சுவரில் பொருத்தப்படும் பீரங்கி வகையைச் சேர்ந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு பீரங்கியில் கண்டி மன்னருடன் தொடர்புபடுத்தக்கூடிய கல்வெட்டுப் பதிவுகளும் காணப்படுகின்றன.
இலங்கை நிபுணர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், காலனித்துவ காலப் பொருட்கள் தொடர்பான சுயாதீனக் குழு முன்வைத்த பரிந்துரையைத் தொடர்ந்து, அவற்றை மீளக் கையளிப்பதற்கு நெதர்லாந்தின் கல்வி, கலாசாரம் மற்றும் விஞ்ஞானத்துறை அமைச்சர் ரியானே லெட்சர்ட் (Rianne Letschert) ஒப்புதல் அளித்துள்ளார்.
1765ஆம் ஆண்டு டச்சுப் படையினர் கண்டி இராச்சியத்தையும் அரச அரண்மனையையும் தாக்கி அழித்தபோது, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதே வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட மேலும் இரண்டு ஆயுதங்கள் 2023ஆம் ஆண்டு இலங்கைக்குத் திருப்பி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீளக் கையளிக்கப்படவுள்ள இரண்டு பீரங்கிகளும் அதே வரலாற்றுப் பூர்வீகத்தைக் கொண்டவையாகும்.
இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான 75 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட ‘Still Among Us’ என்ற நூலின் அறிமுக நிகழ்வில், இந்தத் தீர்மானத்தை இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் வீப் டி போயர் (Wiebe de Boer) வியாழக்கிழமை அறிவித்தார்.
காலனித்துவ காலத்தில் தன்னிச்சையின்றி இழக்கப்பட்ட கலாசாரப் பொருட்களை மீளக் கையளிப்பதன் மூலம் வரலாற்று அநீதிகளைச் சரிசெய்ய முடியும் என நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த இரண்டு பீரங்கிகளையும் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிப்பதற்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.










