இலங்கையின் ஈட்டி எறிதல் நட்சத்திர வீரரான ருமேஷ் தரங்க, உலக தடகள சம்மேளனத்தின் அண்மைய உலகத் தரவரிசையில் 2ஆம் இடத்திற்கு முன்னேறி வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.
தடகளப் போட்டிப் பிரிவு ஒன்றில் இலங்கை தடகள வீரர் ஒருவர் பெற்ற மிக உயர்ந்த உலகத் தரவரிசை இதுவாகும்.
23 வயதான ருமேஷ் தாரங்க, சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய திறமைகளின் மூலம் இந்த நிலையை அடைந்துள்ளார்.
ரோம் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து அவர் புதிய சாதனை படைத்தார்.
இந்த அசுர தூரமானது புதிய இலங்கை தேசிய சாதனையாகப் பதிவானதுடன், இந்த ஆண்டில் உலகளவில் பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட தூர ஈட்டி எறிதலாகவும் அமைந்தது.
அத்துடன், 2026ஆம் ஆண்டு பருவக்காலத்தில் (Season) 90 மீற்றர் எல்லையைத் தாண்டிய உலகின் முதல் தடகள வீரராகவும் அவர் மாறினார்.
ரோமில் அவர் நிகழ்த்திய இந்த சாதனை ஈட்டி எறிதல் வரலாற்றில் எட்டாவது சிறந்த தூரமாகவும், ஆசிய தடகள வீரர் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது சிறந்த தூரமாகவும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பியப் போட்டிகளில் தனது பலத்தை நிலைநிறுத்தி வரும் ருமேஷ், செக் குடியரசில் நடைபெற்ற ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் (Ostrava Golden Spike) தொடரில் 86.57 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.
முன்னணி சர்வதேச போட்டிகள் நெருங்கி வரும் வேளையில், ருமேஷ் தாரங்க உலக அளவிலான பதக்கங்களை வெல்வதற்கான பலமான போட்டியாளராகக் கருதப்படுகிறார்.
இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இலங்கை நீண்டகாலமாக எதிர்பார்த்திருக்கும் பதக்கக் கனவை அவர் நனவாக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.