மட்டக்களப்பு – திருமலை வீதியிலுள்ள விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரின் தொடர் விசாரணையில் குறித்த பிள்ளைகளின் தந்தையார் போலி அடையாள அட்டையை வைத்திருந்தமை மற்றும் பிள்ளைகளை வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சந்தனி நிமாஷா (வயது 05) கசுன் மதுசங்க (வயது- 03) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
குறித்த விசாரணைகளை அடுத்து பல்வேறு மோசடிகள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்த பிள்ளைகளின் தந்தையார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை, அக்குரஸ்ஸ (மன கொடவத்த, பரடுவ) பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணைகளில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்:-
சந்தேகநபர் தனது உண்மையான பெயர் மற்றும் முகவரியை மறைத்து, பதுளையைச் சேர்ந்த ஒருவரின் தொலைந்து போன பழைய அடையாள அட்டையைப் பயன்படுத்தி நடமாடியுள்ளார்.
குறித்த அடையாள அட்டைக்குரியவர் 2023ஆம் ஆண்டு தனது அடையாளஅட்டை தொலைந்ததாக முறைப்பாடு செய்து, புதிய அடையாள அட்டை பெற்றுக் கொண்டு, தற்போது கடவத்தையில் வசித்து வருவது விசேட புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சந்தேக நபர் தனது மனைவிக்கு புற்றுநோய் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்து, இந்த இரு பிள்ளைகளையும் ஆலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களுக்கு அழைத்துச் சென்று மாவட்டம் மாவட்டமாகப் பிச்சை எடுத்துப் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் பொலிசாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கடந்த 20ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள குறித்த விடுதிக்கு வந்து தனது மனைவி காத்தான்குடி வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரைப் பார்ப்பதற்காக வந்துள்ளதாகவும் பிழையான தகவலை தெரிவித்து அறையை வாடகைக்கு எடுத்து பிள்ளைகளுடன் தங்கியுள்ளார்.
எனினும், உயிரிழந்த பிள்ளைகளின் தாய் மாத்தறையிலுள்ள அவரது சொந்த ஊரிலேயே வசித்து வருகிறார் என்பதும் மேலதிக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவ தினமான புதன்கிழமை நடந்தது என்ன?
புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில், இரு பிள்ளைகளையும் அறையினுள் வைத்துப் பூட்டிவிட்டு, சந்தேகநபர் விடுதியின் கீழ் தளத்திலுள்ள மதுபானசாலைக்குச் சென்று அங்கு மது அருந்தியுள்ளார். சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அறைக்குத் திரும்பியுள்ளார்.
அறைக்கு வந்தபோது, அறையிலிருந்த கட்டில் மெத்தை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்துள்ளது பிள்ளைகளை தேடியபோது பூட்டிய அறையினூள் அடர்த்தியான புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிள்ளைகள் இருவரும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இரு சிறுவர்களையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போது, இருவரும் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் விசாரணைகளில் வெளிவந்தது என்ன?
பொலிஸார் நடத்திய தொடர் விசாரணைகளில், சந்தேகநபருக்கு எதிராக நாட்டின் பல பொலிஸ் நிலையங்களில் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளும் பிடியாணைகளும் நிலுவையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
03.10 .2021 அன்று அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை.
21.03. 2022 அன்று சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை.
10.09.2022 அன்று சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை.
மேலும் அனுராதபுரம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பிள்ளைகளை வைத்து பண மோசடிகளில் சந்தேக ஈடுபட்டமை தொடர்பாக பல புகார்கள் பதிவாகியுள்ளது.
இதையடுத்து மட்டக்களப்பு தலைமையகப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்த பிள்ளைகளின் தாய் மாத்தறையிலிருந்து மட்டக்களப்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.