கட்டாய ஆசனப்பட்டி (Seat Belt) ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட மூன்று மாத சலுகைக்காலம் ஜூன் 19ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இதன் பின்னர், சட்டத்தை மீறும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, சாதாரண வீதிகளில் பயணிக்கும் போது சாரதியும், முன் ஆசனத்தில் இருக்கும் பயணியும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.
எனினும், அதிவேக நெடுஞ்சாலைகளில் (Expressways) பயணிக்கும் போது வாகனத்தில் உள்ள சாரதி உட்பட அனைத்துப் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது ஜூன் 19 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்தைப் பின்பற்றுவதற்கான பொறுப்பு சாரதிகள், பயணிகள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு உண்டு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னதாக, சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று இன்று கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை பரிமாற்றகத்தில் அமைச்சினால் நடத்தப்பட்டது.
இதன்போது, “உங்கள் அன்பானவர்களுக்காக ஒரு கிளிக்” (A Click for Your Loved Ones) என்ற கருப்பொருளின் கீழ் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, சர்வதேச மோட்டார் பந்தய சாம்பியன் டிலாந்த மாலகமுவ மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிவேக நெடுஞ்சாலைகள் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி. கஹடபிட்டிய ஆகியோர் கலந்துகொண்டனர்.