உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலைகளைக் குறைக்க தற்போதைக்கு சாத்தியமில்லை என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்குக் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்பே தற்போதும் இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருவதே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து விளக்குவதற்காக இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் நுகரப்படும் எரிபொருளானது சில மாதங்களுக்கு முன்னர் கணிசமான அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
அந்த அதிக விலை எரிபொருள் கையிருப்பு நாட்டில் இருக்கும் வரை, உள்நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது.
எவ்வாறாயினும், தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு தீர்ந்து, குறைந்த விலையிலான எரிபொருள் இறக்குமதிகள் நாட்டிற்கு வரத் தொடங்கியவுடன், அரசாங்கத்தினால் எரிபொருள் விலைகளை மறுபரிசீலனை செய்ய முடியும்.
அண்மையில் நாட்டிற்கு வந்த எரிபொருள் கப்பல்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்டவையா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உலக சந்தையின் குறைந்த விலை பலனைப் பெறுவதற்கு முன்னர், கடந்த காலங்களில் அதிக விலைக்கு ஆர்டர் செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளையே நாடு முதலில் நுகர வேண்டியிருக்கும் என்றார்.
குறைந்த விலையிலான எரிபொருள் நுகர்வோரை சென்றடைவதற்கு இன்னும் சில காலம் எடுக்கும் என சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், விலைகள் குறையும் என எதிர்பார்ப்பதாகவும், அது நடக்கும் போது தற்போதைய நிவாரணத்தைப் பராமரிப்பதா அல்லது எரிபொருள் விலையை மேலும் குறைப்பதா என்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.