வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட சுமார் 10,000 தங்கப்பொருட்களின் எடையிடல் பணிகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த தங்கப்பொருட்கள் தற்போது மத்திய வங்கியின் பாதுகாப்பில் இருப்பதாக CID தெரிவித்தது.
சுமார் 1.61 மில்லியன் மதிப்புடையதாகக் கூறப்படும் இந்த தங்கப்பொருட்களின் எடையிடல் பணிகளை நிறைவு செய்ய ஒரு வருட காலம் எடுத்ததாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும், தங்கப்பொருட்கள் தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, குறித்த தங்கப்பொருட்களை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு அனுப்பி பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
விடுதலைப்புலிகளின் முகாம்கள், சட்டவிரோத வங்கிகள் மற்றும் பிற கட்டிடங்களில் இருந்து மீட்கப்பட்ட இந்த தங்கப்பொருட்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.